Saturday, 19 May 2012


சர்வதேச சமுகம்.


உன் கள்ளத்தனமான மெளனம்

புதைமேட்டில் படிக்கப்படும் அனுதாப உரைகள்

நடுநிலையை தூக்கி நிற்கும்

மேதைமைதாங்கிய உன் கண்டனங்கள்

எல்லைகளை காட்டி கடமையை கைவிட்ட உன் நாசுக்கு,

அறத்தின் மதிப்பாறியாத உன் இதயம்




எனது இரத்தம்

உங்களின் அறிக்கையானது

எனது இரத்தம்

குளிருட்டப்பட்ட அறைகளில் விவாதமானது

எனது இரத்தம்

உன் தத்துவங்களை நனைத்த பின்னும்

எனது இரத்தம்

உன் கண்களை குருடாக்கிய பின்னும்

எனது இரத்தம்

ஏதுமற்ற எம் வாழ்வை சுட்டியபின்னும்

எனது இரத்தம்

ஏதிலியாய் கரைந்த பின்னும்

மெளனமாய் நாவுகளை உள் நோக்கி திருப்பினாய்


மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த உன் பண்பாட்டின் போது

வளமான நாகரீகத்தை கட்டமைத்தது என் மூத்தகுடிகள்

நீர் தடுத்தோம்

வயல் கண்டோம்

வானியல் கண்டோம்

வாழ்வின் வளமனைத்தும் கற்றுத்தெளிந்தோம்.

உம் நீண்டமெளனம்

எம் பிணக்குவியலுக்குள்ளும் புகுந்தது

அறிக்கைகளுக்காக மட்டும் திறந்தது உம் வாய்

எல்லாம் முடிந்த பின்னும் நாகரீக வாழ்க்கைக்காக
காத்திரு

நல்ல நல்ல வார்த்தைகளை தேர்வு செய்து கண்டணம் செய்

சுட்டெரிக்கும் அக்கினியை வயிற்றில் தாங்கி

உம் முகத்தில் உமிழ்ந்து சொல்கிறேன்

என் பாட்டன் முப்பாட்டனின் வார்த்தைகளை


யாதும் ஊரே

யாவரும் கேளீர்
 



 


No comments:

Post a Comment